டெல்லி நீதிமன்றத்தில் காஷ்மீரை சேர்ந்த ஒரு பெண் உள்பட ஐந்து நபர்களுக்கு தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.கே.பி, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்.ஐ.ஏ அலுவலர் ஒருவர் கூறுகையில், "டெல்லியில் வசிக்கும் ஜஹான்சைப் சாமி, காஷ்மீரை சேர்ந்த ஹினா பஷீர், ஹைதராபாத்தில் வசிக்கும் அப்துல்லா பாசித், புனேவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் (சாதியா அன்வர் ஷேக் மற்றும் நபீல் சித்திக் காத்ரி) மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் / ஐ.எஸ்.கே.பி உடன் இணைந்ததற்காகவும், அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை உருவாக்க சதி செய்ததற்காகவும், பல்வேறு மத சமூகங்களிடையே பகைமையை ஊக்குவிப்பதற்காகவும், மோசமான செயல்களை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
சாமி மற்றும் அவரது மனைவி ஹினா ஆகியோர் ஐ.எஸ். பத்திரிகையின் பிப்ரவரி பதிப்பினை விநியோகம் செய்த குற்றத்திற்காக இந்தாண்டு மார்ச் 8ஆம் தேதி தெற்கு டெல்லியின் ஜாமியா நகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.