வேலூர்: காட்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் செயல்பாடு உறுப்பினர் அட்டை வழங்குவது, பூத் கமிட்டி அமைப்பது குறித்த கள ஆய்வு கூட்டமானது மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு நிர்வாகிகளின் மத்தியில் பேசுகையில்,"ஜெயலலிதாவிடம் எப்படி பய பக்தியுடன் இருந்தோமோ, அதே போல் எடப்பாடியிடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.
நமக்கு முதல் கடைசி எதிரி திமுக தான் அந்த தீய சக்தியுடன் நாம் எக்காலத்திலும் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. கருணாநிதி, ஸ்டாலினை உருவாக்கினார் ஸ்டாலின் தன் மகனை (உதயநிதி) உருவாக்கினார். எம்.ஜி.ஆரால் வாழ்வு பெற்றவர் துரைமுருகன் ஆனால் எம்.ஜி.ஆரை அவர் தலைவராக ஏற்கவில்லை. ஆனால் கருணாநிதிக்கு பின் ஏன் துரைமுருகன் அந்த இடத்திற்கு வர முடியவில்லை. மகன் வந்தான் ஏற்றுக்கொண்டார், பேரன் வந்தாலும் ஏற்றுக்கொண்டார். காரணம் கட்சி விசுவாசம் கிடையாது.
பதவியை தக்க வைக்க பேரன் தலைமையை கூட ஏற்றுக்கொள்கிறார்" என்றார். தொடர்ந்து பேசிய அவர்,"2021 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி முதலமைச்சராகியிருந்தால் ஸ்டாலின் அரசியலில் இருந்து ஓடிவிட்டிருப்பார். அரசியலை விட்டு ஓடிவிட்டால் உதய நிதி ஸ்டாலின் எங்கு வருவது.
இதையும் படிங்க: 2026-இல் யாருடன் கூட்டணி? - அன்புமணி ராமதாஸ் சொன்ன நச் பதில்!
அதிமுக வாரிசு அரசியல் கிடையாது. எம்.ஜி.ஆர் யாரையும் அடையாளம் காட்டவில்லை, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி யாரை பொதுசெயலாளராக அறிவித்தார்கள். ஸ்டாலின் சொல்லி உதயநிதி துணை முதலமைச்சராக வந்துள்ளார். ஆனால் அதிமுகவில் அது நடக்காது. ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவுடன் எடப்பாடி பதவிக்கு வந்துள்ளார்.
துரைமுருகன் இது என் கட்சி என சொல்ல முடியாது. திமுக கருணாநிதி, ஸ்டாலின் உதயநிதி, தயாநிதி, முரசொலி மாறன் மற்றும் கனிமொழி போன்றோரின் குடும்ப சொத்து. ஆனால் அண்ணா திமுக முனுசாமி, கந்தசாமி போன்றவர்கள் பதவிக்கு வரலாம். அதே போல் அதிமுகவை வழி நடத்துபவர்கள் இங்குள்ள நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் போன்றோர் தான்.
அதிமுக ஒற்றுமையுடன் இருந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒவ்வொரு இடத்திலும் அதிமுக வேகமாக உறுதியாக இருந்தால் எல்லா கட்சியும் நம்மைத் தேடி வரும். நாம் யாரையும் தேடி செல்ல வேண்டியது இல்லை. உழைப்பு கடுமையாக இருக்க வேண்டும். காட்பாடி, வேலூர் என இரண்டு தொகுதியும் 2026 எடப்பாடி முதலமைச்சராக வெற்றியைத் தேடித் தர வேண்டும்" என்று பேசினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்