ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா பகுதியில் உள்ள காகபோரா, துருப்காம் ஆகியப் பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது மத்திய ரிசர்வ் காவல் படையினரும், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரும் உடனிருந்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்னதாக அங்குள்ள நக்ரோட்டா பகுதியில் ராணுவத்திற்கும், ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாதிகளுக்கும் கடும் மோதல் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நக்ரோட்டா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அவர்களிடமிருந்து கைப்பற்றிய பொருட்களின் துப்பு கொண்டு, காஷ்மீரில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பு குறித்த தகவல்களை தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரிடம் பகிரும் பணி நடந்தது.
இதையடுத்து அவர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சதித்திட்டம் தொடர்பான ஆவணங்கள், வெடி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாஹித் அகமத் என்ற நபரின் வீட்டில் நடைபெற்ற இச்சோதனையில் மேற்கொண்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் அவரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இன்று மாலைக்குள் மேலும் சிலப் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'திட்டமிட்டு நடைபெற்ற டெல்லி கலவரம்; பின்னணியில் பாஜக' - சோனியா குற்றச்சாட்டு