கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 40 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்களை தேசிய புலானாய் முகமை கைது செய்துவருகிறது. அந்த வகையில், புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுக்கு உதவியதாக புல்வாமா மாவட்டத்தின் காகபூரா பகுதியைச் சேர்ந்த பிலால் அகமது குச்சே என்பவரை தேசிய புலனாய்வு முகமை நேற்று முன்தினம் (ஜூலை.5) காவலில் எடுத்தது.
இதைத் தொடர்ந்து, நேற்று (ஜூலை.6) தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 10 நாள்கள் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முக்கியக் குற்றவாளிகள் பிலாலின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டதாகவும், அவர்களை இந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டி பாதுகாப்பு அளித்தவர்களிடம் பிலால்தான் அறிமுகப்படுத்தியதாகவும், தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிலால் வைத்திருந்த மொபைல் போன்களை வைத்தே பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தைத் தொடர்பு கொண்டது வெளிசத்திற்கு வந்துள்ளது.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் புட்காம் பகுதியைச் சேர்ந்த இக்பால் என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருந்தது. இந்தத் தாக்குதலை இக்பால் நடத்தியதாகவும், சதித் திட்டத்தைத் தீட்டிய முக்கியக் குற்றவாளியான முகமது உமர் ஃபரூக் கடந்த 2018 ஏப்ரலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பிறகு, காஷ்மீர் வந்தடைய இக்பால் உதவியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க...புல்வாமாவில் பயங்கரவாதிகள தாக்குதல்: 3 வீரர்கள் படுகாயம்!