டெல்லி: புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தன் குழந்தையை சூட்கேஸில் வைத்து இழுத்துச் சென்றது குறித்து சம்பந்தப்பட்ட அரசுகள் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொது போக்குவரத்தான தொடர்வண்டிகளும், அரசு பேருந்துகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் வெறும் கால்களிலேயே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு நடந்துச் செல்லும் அவலம் இந்தியாவில் தினம்தோறும் அரங்கேறி வருகிறது.
தன்னுடைய சொந்த ஊர் போய் செல்வதற்குள் நிறைய குழந்தைகள் உயிரிழந்த கொடுமைகளும் நிகழ்ந்தது. சிலரோ காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு பயந்து கொண்டு மறுபடியும் தங்களை ஒரே இடத்தில் இருக்க சொல்வார்களோ என்று அஞ்சி ரயில்வே தண்டவாளங்கள் வழியாக தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற நிகழ்வுகளும், அவர்கள் மீது ரயில் ஏறிய கொடுமையும் இந்தியாவில் அரங்கேறியது.
இச்சூழலில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகன் அப்பெண் வைத்திருக்கும் சூட்கேஸ் மீது படுத்துக்கொண்டு செல்லும் காட்சி மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. இவர்கள் எப்போது வீடு போய்ச் சேர்வார்கள் என்ற எண்ணமும் கவலையும் தான் தற்போது மேலோங்கி இருக்கிறது. இவர்கள் ஆரோக்கியமாகவும், எந்த ஒரு பிரச்னையும் இன்றி தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
இந்த காணொலி செய்தி தளங்கள் மூலம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக்கொள்ள, அதை வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பஞ்சாப், உத்தரப் பிரதேச அரசுகளிடம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.