இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் போதும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமானவை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஆகியவற்றின் இயக்குநர்களுடன் கரோனா குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்ஷ் வர்தன், இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. மேலும், பண்டிகை காலமும் தொடங்குகிறது. இதனால் கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிக முக்கியமானவை.
இந்தியாவில் தற்போது மூன்று கரோனா தடுப்பு மருந்துகள் சிறப்பான முறையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு தடுப்புமருந்து மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையிலும், இரண்டு தடுப்பு மருந்துகள் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனையிலும் உள்ளன" என்றார்.
மேலும், மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதையும் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : ‘கெட்ட கொழுப்பு இல்லாத இந்தியா’ - ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை