வெளியுறவுக்கொள்கை சிக்கல்
கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கத்துக்குப்பின், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் விளைவாக மத்திய அரசு காஷ்மீர் சார்ந்த கொள்கை முடிவுகளை தற்காலிகமாக மாற்றியுள்ளது.
கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மாநிலம் ராணுவத்தின் கடும் கட்டுப்பாட்டில் இருந்துவந்த நிலையில், தற்போது அது மெள்ள தளர்த்தப்படுகிறது.
காஷ்மீரில் மெதுவாக இணையச் சேவை திரும்பிவரும் நிலையில், தற்போது அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் சிக்கலின்றி பூர்த்தி செய்யும்விதமாக மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேவேளையில், சமூகவலைதள சேவைகளின் அனுமதி காஷ்மீரில் தற்போதைக்கு சாத்தியமில்லை எனத் தெரிகிறது.
ஒரு துப்பாக்கி குண்டும் வெடிக்கவில்லை
அண்மையில் வெளிநாட்டுத் தூதர்கள் பலர் ஜம்மு-காஷ்மீர் சென்று பார்வையிட மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி அமெரிக்கா, வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவு, தென்கொரியா, மொராக்கோ, நைஜீரியா, அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தத் தூதுவர்கள் ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் ஆகியோரிடம் உரையாடினர். அதேவேளை, காஷ்மீரில் கைதுசெய்யப்பட்ட முன்னணி அரசியல் தலைவர்களை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. காஷ்மீரில் சட்டப்பிரிவு நீக்கத்துக்குப்பின் ஒரு துப்பாக்கி குண்டும் வெடிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டுவருகிறது.
அரசியல் சூழல் - இயல்புநிலை
அத்துடன் மத்திய அரசும் தனது அமைச்சர்களை, காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு அம்மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னெடுக்கப்போகும் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சிறப்புத் தகுதி நீக்கத்திற்குப்பின், காஷ்மீரில் மீண்டும் இயல்புநிலையை கொண்டுவரும் முயற்சியின் பகுதியாகவே, மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது.இருப்பினும்...
- குறிப்பிட்ட சில தூதுவர்களை மட்டும் காஷ்மீருக்கு அழைத்துச் செல்வது ஏன்?
- அவர்கள் காஷ்மீரில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னணி அரசியல் தலைவர்களை சந்திக்க அனுமதிக்காதது ஏன்?
- மக்களிடம் நன்மதிப்பை பெறவிரும்பும் அரசு அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை காஷ்மீருக்கு அனுப்பாதது ஏன்?
இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசிடம் தற்போதுவரை பதில் இல்லை.
எனவே மத்திய அரசு தற்போது மேற்கொண்டுவந்த முன்னெடுப்புகள் அரைவேக்காடு நடவடிக்கைகள் மட்டுமே. அரசு இயல்புநிலையை பிரதானமாகக் கருதும்பட்சத்தில், அங்கு அரசியல் சூழலை இயல்புநிலைக்கு கொண்டுவர வேண்டும்.
ஜனநாயகத்துக்கு நல்லதல்ல
அண்மையில் காஷ்மீர் களநிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய ஐயத்தின் வெளிப்பாடாக முக்கிய முன்னெடுப்பு மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்டுவருகிறது. காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், அங்கு கள நிலவரம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தனிநபர் சுதந்திரம் குறித்து கருத்துதெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தேசிய பாதுகாப்புக்காக தனி நபர் சுதந்திரம் எல்லை மீறி பறிக்கப்படுவது சரியா என்ற வகையில் கருத்தை முன்வைத்தது. தேச பாதுகாப்பை முன்வைத்து தனி நபர் சுதந்திரம் பறிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற எதிர்வினைகளால் காஷ்மீர் குறித்து புதிய யுக்தியை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது. மெள்ள மெள்ள காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், இயல்புநிலை திரும்புவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக இது தெரிகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கையாக...
- அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாடு கட்சி, பி.டி.பி. கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
- மூன்றாவதாக, அங்குள்ள இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பங்களிப்பை அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.
- அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்க்கப்பட்டபின் அங்கு கிளர்ச்சி ஏற்படாத வண்ணம் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க தொடர் முயற்சிகளை எடுப்பது அவசியமாகும்.
இது காலத்தின் தேவை
காஷ்மீரில் பனிக்காலம் நிறைவடைந்ததும் அங்கு எவ்வித சிக்கலை ஏற்படுத்தலாம் என பாகிஸ்தான் காத்துக்கொண்டிருக்கிறது. எனவே, வரும் கோடைகாலத்திற்குள் சரியான பாதையில் காஷ்மீரை திருப்பும் முயற்சியை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை. கோடை காலத்திற்கு தயாராகிறது காஷ்மீர்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு