பிகார் மாநிலம் ஜான்கி கிராமம் அருகே உள்ள சோன்பர்சா எல்லைப் பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த காவல் துறையினர் நேற்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில், சிக்கிய இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இந்தியர் ஒருவரை நேபாள ஆயுதக் காவல் படை கைது செய்தது.
சட்ட விரோதமாக நேபாள எல்லைப் பகுதிக்குள் நுழைந்ததால், இச்சம்பவம் நடைபெற்றதாக நேபாள காவல் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஆனால், கைதுசெய்யப்பட்ட லகான் கிஷோர் இதுகுறித்து கூறுகையில், "எல்லைப் பகுதியில் நின்றுகொண்டிருந்த நானும் எனது மகனும் மருமகளைப் பார்க்கச் சென்றோம். அப்போது, நேபாள பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் எனது மகனை அடித்தார்கள். இதனைத் தொடர்ந்து, அவர்கள் சரமாரியாகச் சுட்டனர். இந்திய எல்லைக்குள் நுழைந்த எங்களை மீண்டும் நேபாள பகுதிக்குள் அவர்கள் இழுத்துச் சென்றனர். நேபாளத்தில் கைது செய்ததாக என்னை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார்கள்" என்றார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட லகான் கிஷோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஜூன் 14ஆம் தேதி வரை நேபாளத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இருநாடுகளுக்கிடையே எல்லைத் தகராறு ஏற்பட்டது. லிபுலேக், காலபானி, லிம்பியாதூரா உள்ளிட்ட பகுதிகளை நேபாளம் தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. இப்பகுதிகள் உத்ரகாண்ட் மாநிலத்துக்கு உள்பட்டவை என இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நேபாளம் எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் பலி!