கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், நாட்டில் வரவிருக்கும் பண்டிகைகள், விரைவில் தொடங்கவுள்ள குளிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 'ஜன் அந்தோலன்' எனும் கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.08) தொடங்கி வைக்கிறார்.
இந்தப் பரப்புரையை மோடி ட்விட்டரில் தொடங்கி வைப்பார் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியைப் பாராட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
அதில், "கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் இந்தப் போர், மக்கள் தாங்களாகவே முன்னெடுத்தது. கரோனா வீரர்களின் உதவியால் இந்தப் போர் பெரும் வலிமைப் பெற்றுள்ளது. நம்முடைய இந்தக் கூட்டு முயற்சி, பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதை அப்படியே தக்கவைத்து நம் குடிமக்களை தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
கரோனாவை எதிர்த்துப் போராட நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். ”முகக்கவசம் அணிவோம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவோம், கைகளை சுகாதாரமாகப் பேணுவோம்” என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். கரோனாவை ஒன்றிணைந்து வீழ்த்துவோம்” என ட்வீட் செய்துள்ளார்.