மத்திய அரசின் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, ஆகியவற்றுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்கு, டெல்லி ஆகிய பகுதிகளில் அமைதிவழியில் நடைபெற்ற போராட்டம் திடீரென பெரும் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறைகளில் 54 பேர் உயிரிழந்ததையடுத்து இதுதொடர்பாக டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இவ்வழக்கில் இதுவரை 751 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, மாணவர் அமைப்புகளின் தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா ஜார்கர், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன், பிஞ்ச்ரா டோட் அமைப்பைச் சேர்ந்த நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான் ஆகியோரை கைது செய்தது.
வகுப்புவாத கலவரத்தை தூண்டியதாக மொத்தமாக 1,575 பேர் உபா சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கு நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள், அரசியல் இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் உள்ளிட்ட 15 பேர் தங்கள் மீது காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க கோரிக்கை விடுத்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி அமிதாப் ராவத்தின் அமர்வுக்கு முன்பாக வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீது டெல்லி காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகலை அவர்களிடம் வழங்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.