தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், "கரோனா பரவலை அடுத்து அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதுமுள்ள கர்ப்பிணி பெண்களின் மகப்பேறு சேவைகளுக்கு போதுமான ஆம்புலன்ஸ்கள் கிடைக்கவில்லை. மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான அனுமதியும் மறுக்கப்படுவது அவர்கள் தேவையான அடிப்படை சுகாதார வசதியை அடைவதை பல சந்தர்ப்பங்களில் தாமதப்படுத்துகிறது.
சில சந்தர்ப்பங்களில் இதுவே தாய் மற்றும் பிறந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமாகவும் மாறுகிறது. அவை தேசிய பெண்கள் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் மருத்துவமனைகள் மற்றும் அலுவலர்களின் நிர்வாக குறைபாடுகள், அலட்சியங்கள் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளன.
இந்தியாவில் பிரசவத்தின்போது நிகழும் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பு முறையின் செயல்கள் மற்றும் திட்டங்களை முறையாக செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் / யூனியன் பிரதேசங்களுக்கும் முன்னர் கடிதம் எழுதி வலியுறுத்தியதை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். மேலும், கர்ப்பிணிகளுக்கான ஆம்புலன்ஸ் சேவைகளை உறுதி செய்வதற்கும், மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சையளிக்க தனி படுக்கைகள் ஒதுக்கீடு செய்வதற்கும், பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்ட அவசர உதவி எண்களை முறைப்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்" என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.