நாட்டில் நடக்கும் குற்றங்கள், பதிவான குற்ற வழக்குகள் குறித்து ஆண்டுக்கு ஒரு முறை தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிடுவது வழக்கம். 2017ஆம் நடந்த குற்ற வழக்குகள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. இதில், நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறை குறித்து தகவல் ஏதும் இடம்பெறவில்லை.
கும்பல் வன்முறை
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்கு எதிராக கும்பல் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துவருவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். முக்கியமாக மத அடிப்படைவாதம், பசு கடத்தல் குறித்தே கும்பல் வன்முறைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கும்பல் வன்முறையைத் தடுக்கக் கோரி பாலிவுட் பிரபலங்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். அவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.
அதிகரிக்கும் குற்றங்கள்
ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து எந்தவொரு தனி அறிக்கையும் அதில் மருந்துக்குக்கூட இடம்பெறவில்லை. ஆனால், மதத்தின் அடிப்படையில் நடக்கும் கொலைகளுக்கு என அறிக்கையில் தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு மட்டும் 50 லட்சம் கொடூரமான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 3.6 விழுக்காடு அதிகமாகும்.
நாட்டில் கடும் குற்றங்கள் குறித்து 48 லட்சம் முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையானது ஓராண்டு காலதாமதமாகி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.