கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஊரடங்கு காரணமாக விமானம், கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு சிறப்பு விமானங்களும், சிறப்புக் கப்பல்களும் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாலத்தீவில் சிக்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 470 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 187 பேர் உட்பட 698 பேர் இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் ஜலாஷ்வா சிறப்புக் கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தனர்.
துறைமுகத்திலேயே அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கோள்ளப்பட்டதாக துறைமுக அலுவலர் ஒருவர் தெரிவித்தார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு கேரள அரசின் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று குறிப்பிட்ட அவர், மாவட்டங்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அதை காவல் துறை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், மாலத்தீவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களுக்குத் துறைமுகத்திலேயே பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்களின் ஸ்மார்ட்போன்களில் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது.
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலங்களிலுள்ள தனிமைப்படுத்தும் முகாம்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்லும் ஏற்பாடுகள் கேரள அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ஒரு லட்சம் பேருக்கு எதிராக வழக்குப்பதிவு - காரணம் என்ன?