இந்தியாவில், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. ஆனால் அவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இதன் காரணமாக பல குழந்தைகளின் கனவுகள் பறிக்கப்படுகின்றன. அவர்களின் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. 'குழந்தைகள் கடவுளின் பிள்ளைகள்' என்கின்றோம். ஆனால், அவர்களில் பலர் பசியைப் போக்கவும், கல்வியறிவைப் பெறவும் ஏங்கித் தவித்துவருகின்றனர். தங்களை காக்க மீட்பர் யாரேனும் முளைத்துவர மாட்டார்கள் என அந்த பிஞ்சுகளின் ஏக்கம் எத்தனை பேருக்கு புரியும்.
ஆனால், தெலங்கானா காவல் துறையினர் இன்று குழந்தைகளின் கடவுளாக பார்க்கப்படுவதை யாரும் சொன்னால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. 'காக்கிச் சட்டை போட்ட கடவுள்' என்று எல்லோராலும் பாராட்டப்படுகின்றனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சைபராபாத் காவல் துறையினர் 2018ஆம் ஆண்டு 'ஆப்ரேசன் ஸ்மைல்' விசாரணையின் கீழ் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களது முயற்சி வீண்போகவில்லை. அதனை நிகழ்த்தியும் காட்டிவிட்டனர்.
இந்த 'ஆப்ரேசன் ஸ்மைல்' மூலம் இதுவரை 581 குழந்தைத் தொழிலாளர்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர். இதில் 543 குழந்தைகளில் 339 பேர் ஆண்குழந்தைகள், 204 பேர் பெண்குழந்தைகள். மீதம் 38 பேரில் 29 சிறுவர்கள், 9 பெண்கள் அவர்களது பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து கூறிய காவல் ஆணையர், தங்களது எதிர்கால நோக்கமே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளை மீட்பதுதான் தலையாய கடமை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, சைபராபாத் காவல் துறையினரை பொதுமக்கள் பலரும் பாராட்டிவருகின்றனர். தொடரட்டும் உங்களின் பாய்ச்சல்!