மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நேற்று முத்தலாக்கிற்கெதிரான மசோதாவை சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும், மசோதா தொடர்பான வாக்கெடுப்பு அதிக உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றிபெற்றது. மசோதாவிற்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர். இதன்மூலம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த பெண்களின் தைரியத்திற்கு நன்றி தெரிவிக்கும் சந்தர்ப்பம் இது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவான (திருமண பாதுகாப்பு உரிமை) மசோதா நிறைவேற ஆதரித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. இந்திய வரலாற்றில் இந்தச் சட்டத்திருத்த மசோதா முக்கிய பங்கு வகிக்கும்' என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.