புதுச்சேரி சட்டப்பேரவை வாளாகத்தில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அடங்கிய காட்சிப்பதிவு ஒன்றை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். அதில், நாளை முதல் மதுபான கடைகள் உள்பட அனைத்துக் கடைகள், தொழிற்சாலைகள், மாநிலத்திற்குள்ளான போக்குவரத்து இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் அவர், ”மின் விநியோகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சாரம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் உள்ளது. ஆனால், மத்திய அரசு மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட முறையில் முடிவை எடுத்துள்ளது.
எனவே, மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போன்றவைகளை செயல்படுத்த முடியாது. ஆகவே, இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்“ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறப்பு!