கரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகள் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு, பல மாநிலங்களில் மாநில அரசு சார்பாக இன்றும் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
பல மாநிலங்களில் பேருந்து வசதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 400க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல்வாதிகள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் நடந்துவரும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் கூட்டம் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு முன்னதாகவே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாநிலங்களவை சபாநாயகருடன் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு, அனைத்து கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஏற்கனவே சிவசேனா, டிஎம்சி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரோனா வைரஸ் தொற்று பரவுவதால் தங்களால் திங்கட்கிழமை முதல் நாடாளுமன்ற அவைகளில் பங்கேற்க முடியாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முன்னதாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனாவை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை - பிரதமர் மோடி கவலை