டெல்லியில் புத்த பிட்சுகள் ஏற்பாடு செய்திருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசியதாவது:
காங்கிரஸ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. இந்தச் சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி ஒரு பத்து வாக்கியமாவது துணிந்து பேச வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் என்ன பிரச்னை இருக்கிறதென்று ஓரிரு வாக்கியமாவது பேசுங்கள். அவர் ஒரு பெரிய கட்சியை வழிநடத்துகிறார்.
தான் செய்வது சரியா? என்று அவர் சீர்தூக்கி பார்க்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யாமல் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றார். இந்தச் சட்டம் என்ன சொல்கிறது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்குள்ளாகி அகதிகளாக இந்தியா வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்க வழிவகைசெய்கிறது.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக வாதாடியவர்கள்தான். ஆனால் தற்போது இந்தப் பிரச்னையை புரிந்துகொள்ளும் வகையில் காங்கிரசில் தலைவர்கள் இல்லை.
இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து, பாஜக ஆட்சி மீண்டும் அமைந்ததும், நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாகத் தீர்க்க முடியாமல் நிலுவையில் இருந்த பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தற்போது எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் அரசியல் நடத்த பிரச்னை இல்லை. ஆகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை பிடித்துக் கொண்டனர்.
காங்கிரசும், இடதுசாரிகளும் தங்களின் வாக்கு வங்கியை கவனத்தில்கொண்டு இவ்வாறு நடந்துகொள்கின்றன. அவர்கள் வாக்கு வங்கிக்கு முதலிடம் கொடுக்கின்றனர்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு முதலிடம் கொடுக்கிறார். 1947ஆம் ஆண்டு நாடு பிரிவினையை சந்தித்தபோது, பாகிஸ்தான், வங்கதேசத்தில் 23 விழுக்காடு இந்துக்கள் இருந்தனர்.
ஆனால் தற்போது அது மூன்று, ஏழு விழுக்காடாக குறைந்துள்ளது. ஆக சிறுபான்மையினருக்கு மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்திய நீரோட்டத்தில் கலக்கவும், கல்வி வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.
இதையும் படிங்க: ராகுலை ஜின்னாவுடன் ஒப்பிட்ட உமா பாரதி!