பாஜகவின் தாய் கட்சி பாரதிய ஜன சங்கமாகும். அதன் நிறுவனத் தலைவரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்ரீநகர் சிறையில் சர்ச்சைக்குரிய விதமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும், அதனை மறுத்தவர் நேரு என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
முகர்ஜியின் 119ஆவது பிறந்தநாளை பாஜக இன்று நாடு முழுவதும் கொண்டாடிவருகிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம் பரப்புரை மேற்கொண்ட நட்டா, "முகர்ஜி ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர், சர்ச்சைக்குரிய விதமாக அவர் உயிரிழந்தார். முகர்ஜியின் தாயார் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என நேருவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், விசாரணைக்கு அவர் அனுமதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத் தன்மையற்ற செயலை இது காட்டுகிறது. அவர் எப்படி உயிரிழந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவரின் பாதையைப் பின்பற்றி முகர்ஜியின் கொள்கைகளுக்காகப் போராடுவோம். பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேசிய ஒற்றுமைக்காக அவர் போராடினார். அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு நீக்கத்திற்காக விதை போட்டவர் முகர்ஜி" என்றார்.
இதையும் படிங்க: கூலிப்படையை ஏவி இளைஞர் மீது தாக்குதல் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!