பெங்களூரு (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அருகே உள்ள ஹோசகோட்டே தாலுகாவில் உள்ள கிராமத்தில் சிறிய அனுமார் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலுக்கு அதிக அளவு பக்தர்கள் வருவதால், கூட்டநெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமத்திற்குள்ளாவதை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த ஹெச்எம்ஜி பாட்ஷா என்பவர், தனது ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தை கோயில் நிர்வாகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தற்போது பெங்களூரு-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அருகே அவர் வழங்கிய நிலத்தில் புதிய அனுமார் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய பாட்ஷா, " சிறிய கோயில் என்பதால் வழிபாட்டின் போது பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் தனது குடும்பத்தினருடன் ஆலோசித்து சொந்த நிலத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். எனது இச்செயல் சமுதாயத்திற்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்" என்றார்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகி பேரே கவுடா கூறுகையில், " பாட்ஷா அவரது முழு மனதுடன் இந்த நிலத்தை கோயில் கட்ட வழங்கியுள்ளார். தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. பாட்ஷாவின் பெருந்தன்மை எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். பாட்ஷாவினை புகழ்ந்து அந்த கிராமப் பகுதிகளில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சாலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிராம மக்கள்!