மும்பையில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடையவர், பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் வேலை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சாதரணை உடையில் சென்ற காவல் துறையினர் சந்தேகித்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
குற்றம்சாட்டப்பட்ட அந்நபரின் பெயர் ராணா (62) என்பதும், 1990ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்து தலைமறைவானதும் தெரியவந்தது.
மேலும் கொள்ளை வழக்கிலிருந்து பிணை பெற்ற ராணா, தனது தோற்றங்களை மாற்றிக் கொண்டு பல்வேறு ஊர்களில் சுற்றி வந்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் ராணா உள்ளிட்ட மூன்று பேருக்கு மும்பை நீதிமன்றம் பிணையிலிருந்து வெளிவர முடியாத அளவிற்கு வாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையறிந்த பின் தான் ராணா தலைமறைவானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அடையாளங்களை மாற்றிக்கொண்டு நடிகர் சல்மான் கான் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:சமூக வலைத்தளத்தில் நடிகர் சல்மான் கானை மிரட்டியவர்கள் கைது!