மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை நேற்று (ஆக.21) அல்வீனா இமாம் குரைஷி என்பவர் சந்தித்தார். அப்போது அல்வீனா தனது கணவர் மொபைல் மூலமாக தனக்கு தலாக் கூறியுள்ளதாகவும், அதற்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் செளகான் கூறுகையில் “மத்தியப் பிரதேச காவல் துறைத் தலைவரை (டிஜிபி) தொடர்புகொண்டேன். அவர் உடனடியாக பெங்களுரூ காவல்துறையினரிடம் இது குறித்து பேசியுள்ளார்.
கண்டிப்பாக இந்தப் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாக்குறுதி அளித்தார்.
அல்வீனா இமாம் குரைஷிக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு 13, 5 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஜுன் 11ஆம் தேதி கணவர் தன்னை தாக்கி வீட்டைவிட்டு வெளியே அனுப்பியதாகவும், இதனால் போபாலுக்குச் சென்றதாகவும், ஜுலை 31ஆம் தேதி மொபைலில் தனக்கு தலாக் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இது குறித்து பெங்களுரூ காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தபோது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தனக்கு எதிராக காவல் நிலையத்தில் தனது கணவர் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், “நான், எனது கணவர், குழந்தைகள் அனைவரும் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள். எனது கடவுச்சீட்டு அவரிடம் உள்ளது. இந்தச் சூழலில் அவர் என்னை இங்கு விட்டுவிட்டு குழந்தைகளுடன் அங்கு சென்றுவிடுவாரோ என்று அச்சமாக உள்ளது.
எனவே முதலமைச்சரிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். முதலமைச்சர் பெங்களூருவில் பேசுவதாகவும், அவர்கள் வெளிநாட்டிற்குப் போவதை நிறுத்திவைப்பதாகவும் உறுதியளித்ததன்பேரில் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” எனவும் அல்வீனா தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகளாகப் பிறந்ததால் மனைவிக்கு முத்தலாக்!