மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே மேற்குவங்கத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துவருகிறது. இதற்கிடையே, இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், பாராக்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தை கைபற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை தடுக்கச் சென்ற பாஜகவின் மக்களவை உறுப்பினர் அர்ஜூன் சிங் தாக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
ரத்தம் தெறிக்கும் அளவுக்கு அடி வாங்கிய மக்களவை உறுப்பினர் அர்ஜூன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அர்ஜூன் சிங் கூறுகையில், "எங்கள் கட்சி அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கைப்பற்ற முயற்சி செய்தார்கள். அதனை தடுக்கச் சென்ற நான் தாக்கப்பட்டேன். மக்களவை உறுப்பினர் எனக் கூறிய பிறகும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானேன். என் கார் சேதபடுத்தப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் மனோத் வர்மா என் தலையில் தாக்கினார்" என்றார். பாஜகவில் சேர்வதற்கு முன்பு அர்ஜூன் சிங் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.