திருவனந்தபுரம்: லைஃப் மிஷன் தலைமை நிர்வாக அலுவலர் யு.வி.ஜோஸ், லைஃப் மிஷன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரெட் கிரசெண்ட் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்திடம் ஒப்படைத்தார். இது தற்போது ஊடகங்களில் கசிந்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வடக்கஞ்சேரியில் உள்ள லைஃப் மிஷன் வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 14.5 கோடி வீட்டு வசதி செலவுக்கும், ரூ.5.5 கோடி மருத்துவமனை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாக கொண்ட ரெட் கிரசண்ட் ஆணையத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் முகமது அதீக் அல் ஃபலாஹி மற்றும் யு வி ஜோஸ் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் ஏழு பக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கட்டுமான கால ஒப்பந்தம் அல்லது அதன் பின்னால் உள்ள ஒப்பந்தக்காரர் பற்றி எதுவும் இதில் கூறவில்லை.
தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய சந்தேக நபரான ஸ்வப்னா சுரேஷ் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று நம்பப்படுகிறது.
அவர்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி கட்டுமானப் பணிகளை ஒப்படைத்ததாகவும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.
இருப்பினும், இது மனிதாபிமானப் பணிகளுக்காக நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு என்றும் ரெட் கிரசண்ட் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முரண்பாடாக ஏதேனும் பிரச்னைகள் எழுந்தால், இருவரும் அவற்றை பரஸ்பரம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றும், ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் திட்டத்தை கைவிட சுதந்திரம் உள்ளது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.
இருப்பினும், இந்தத் திட்டத்தில் மாநில அரசு ஒரு தரப்பாக இருந்தாலும் நிதி தணிக்கை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகலை வெளிப்படுத்த கோரியிருந்தார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் அக்காராவும் இந்த விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரியிருந்தார். ஆனால் அதற்கும் பதில் அளிக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் பினராயி விஜயனை கடுஞ்சொற்களால் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் பெயிலுக்கு நோ சொன்ன நீதிமன்றம்!