இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தெலங்கானவைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவும் வீரமரணமடைந்தார்.
இவரது உடல் நேற்று (ஜூன் 17) டெல்லியிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் கே.டி. ராமா ராவ் ஆகியோர் ராணுவ வீரர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் இறுதிச்சடங்கு மேற்கொள்வதற்காக வித்யாநகருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை பெற்றுச் செல்ல அவருடைய மனைவி சந்தோஷியும், அவரது இரண்டு பிள்ளைகளும் புதன்கிழமை காலை டெல்லிக்குச் சென்றனர். அங்கு சைபராபாத் காவல் ஆணையர் விசி சஜ்ஜனார் அவர்களை வரவேற்று, ஈடுசெய்யமுடியாத அவர்களின் இழப்பிற்கு ஆறுதல் கூறினார்.
இது குறித்து சூரியாபேட்டை மாவட்ட ஆட்சியர் வினய் கிருஷ்ணா ரெட்டி கூறுகையில், “சந்தோஷ் பாபுவின் இறுதிச்சடங்கு அவரது குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் நடைபெறும். அவருடைய குடும்பத்தார் இறுதிச் சடங்குகளைச் செய்வார்கள். அதன் பிறகு ராணுவ மரியாதை செலுத்தப்படும். இந்தச் சடங்கில் கலந்துகொள்ள 50 பேரை மட்டுமே நாங்கள் அனுமதித்துள்ளோம்” என்றார்.
ராணுவ வீரரின் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் செல்லும்போது, அவரது தியாகத்திற்கு மரியாதை செலுத்தும்விதமாகப் பொதுமக்கள் பூவைத் தூவினர். அவரைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர். மேலும் தெலங்கானா முழுவதும் பல இடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், பிற அமைப்புகளின் உறுப்பினர்கள் ராணுவ வீரருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ கர்னல் சந்தோஷ் பாபுவைப் பற்றி...
ஹைதராபாத்தில் உள்ள சைனிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, சந்தோஷ் பாபு ராணுவத்தில் சேர்ந்து படிப்படியாகப் பல்வேறு பதவிகளைப் பெற்று கர்னலாகப் பதவி உயர்வுபெற்றார்.
இந்தியா - சீனா எல்லையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பணியில் இருந்தார். 16ஆவது பிகார் ரெஜிமெண்டில் சந்தோஷ் பாபு கமாண்டிங் அலுவலராகப் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புல்வாமாவில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சூடு