நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, காங்கிரஸ் அல்லாத வேறு அரசியில் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில், வரும் 30ஆம் தேதி நாட்டின் பிரதமாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, தன் சொந்த தொகுதியான வாரணாசிக்கு நாளை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அங்கு, போலீஸ் லைன் சாலையிலிருந்து காசி விஷ்வநாதர் கோயில் வரை பேரணியாக செல்லும் மோடி, காசி விஷ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்கிறார். பின்னர், மாலையில் அங்குள்ள வர்த்தக மையத்தில் பாஜக தொண்டர்கள் இடையே உரையாற்ற இருக்கிறார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவை 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அமோக வெற்றிபெற்றார் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.