மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு 42 இடங்களில் 18 இடங்களை பாஜக கைபற்றியது. மேலும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களும், 50 கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர். இது திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தில் நடந்தத் தேர்தல் பரப்புரையில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆலோசகர் பிரசாந்த கிஷோரை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சந்தித்துள்ளார்.
இந்நிலையில் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். முன்னதாக ஆந்திர மாநிலத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் செயல்பட்டார். ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்றது.