உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் மே 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகருமான சஞ்சய் நிருபம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மோடி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து அவர், "நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் வாரணாசி காசி விஸ்வநாதன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களிடம் இருந்து 550 ரூபாய் டோக்கன் தொகையாக வாங்கப்படுகிறது. இது தான் இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்கும் லட்சணமா?
தற்போதைய ஆட்சியில், வாரணாசியில் இதுபோன்ற நடவடிக்கைகளால் மோடி தன் சொந்த தொகுதியிலேயே 'ஔரங்கசீப்' போன்று நடந்துகொள்கிறார்.
"டெல்லி, பஞ்சாப், போபால் உள்ளிட்ட தொகுதிகளில் அடுத்து ஆறு, ஏழாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரை தைரியமாக சொல்லி பரப்புரையில் ஈடுபடுவோம். மோடி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்கிறோம்" என்று அதிரடியாக தெரிவித்தார்.