கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் தொடந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.
இதில், ஆரம்ப நாட்கள் முதலே கரோனா தொற்றுப் பரவலின் அபாயங்கள் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியே தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இது குறித்து பதிவிட்டிருந்தார்.
மேலும், உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தை தாண்டும் என்றும் கடந்த ஜூலை 17ஆம் தேதி ராகுல் எச்சரித்திருந்தார்.
இந்தியாவில் தற்போது கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், தான் ஜூலை 17ஆம் தேதி பதிவிட்டிருந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து, "கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆனால் மோடி அரசைக் காணவில்லை" என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை 17ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டிவிட்டது. கரோனா தொற்று இதே வேகத்தில் பரவினால், ஆகஸ்ட் 10ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டிவிடும்.
எனவே மத்திய அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்து கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதுவரை நாடு முழுவதும் 20,25,409 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 34.17 விழுக்காட்டினர் (சுமார் 6,07,384) மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டில் 20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!