காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரம்புதூரில் உள்ள சியோமி கிடங்கிலிருந்து மும்பை வரை செல்போன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி ஆந்திராவின் சித்தோர் மாவட்டத்தில் உள்ள நகரி வழியாக சென்றுக்கொண்டிருக்கையில், அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று லாரியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உடனடியாக லாரியிலிருந்த ஒட்டுநரின் கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டிவிட்டு லாரியை திருடிச் சென்றுள்ளனர். லாரியிலிருந்த செல்போன்களின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, லாரியின் ஓட்டுநர் உடனடியாக காவல் துறைக்குத் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், களத்திலிறங்கிய காவலர்கள் திருடப்பட்ட லாரியை தேசிய நெடுஞ்சாலையில் புட்டூர் அருகே கண்டுப்பிடித்தனர். லாரியில் மொத்தமாக 16 பெட்டிகளில் 15 ஆயிரம் செல்போன்கள் இருந்துள்ளன. இவற்றில் 8 பெட்டிகளை மட்டும் எடுத்துவிட்டு கடத்தல்காரர்கள் லாரியை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.