உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியாவில் நேற்று ஸ்ரீ ராம தீர்த்த சேத்ரா அறக்கட்டளையுடன் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இதில் மாவட்ட நிர்வாகம் சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாக அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டம் குறித்து பேசிய அவர், முன்னதாக கோயில் வளாகத்தில் அனைவரும் மொபைல் போன்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போடு வகுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாக அலுவலர்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களும் மட்டுமே மொபைல் போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோயில் வளாகத்தில் பலர் புகைப்படம் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவருவதால் கோயிலின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவுகள் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மொபைல் போன்கள் மட்டுமின்றி, கைக்கடிகாரம், பெல்ட், புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட எவ்வித மின்னணு பொருள்களையும் பக்தர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.
ராமர் கோயிலின் பாதுகாப்பினை வலுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தான் ஆதரவளிப்பதாகவும், அவரே தன்னுடைய மொபைல் போனை கோயில் வளாகத்திற்குள் எடுத்துச் செல்வதில்லை எனவும் கூறினார்.
உலகளவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் இந்த நடைமுறை நீண்டகாலமாக அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: பக்தர்கள் தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு செய்ய திருப்பதி கோயில் நிர்வாகம் முடிவு