திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கடலூரில் கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புதுச்சேரிக்கு வருகைதந்தார். அப்போது, புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ, சிவக்குமார், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்ட திமுகவினர் அவரைச் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘வேண்டுமென்றே திட்டமிட்டு, வேறு வழியின்றி ஆளும் அதிமுக அரசும் தேர்தல் ஆணையமும் இந்த உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளன. இதுவரை மறுவரையறை முழுமைபெறவில்லை. குறிப்பாக, இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.
ஆனால், அதிமுகவினர் எங்கள் மீது வேண்டுமென்றே பொய்ப்புகார்களைக் கூறி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்’ என்றார்.
அப்போது தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அவருடன் இருந்தனர். முன்னதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சார்பாக அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை: பாஜக துணைத்தலைவர்!