உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகாப்பூர் அருகே அமைந்துள்ள சிசையா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப். இவரது மகன் மகேஷ் (15). இவர், கடந்த சனிக்கிழமை மாலை, மாடு மேய்த்துக்கொண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
அந்தச் சமயம் அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் மாடுகள் புகுந்து கரும்பைச் சேதப்படுத்தின. இதனால் ஆத்திரமடைந்த தோட்டத்தின் உரிமையாளர் மாட்டை பிடித்துவைத்துக்கொண்டு, மகேஷிடம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கை கலப்பாக மாற, தோட்டத்தின் உரிமையாளர், அவரது இரு சகோதரர்கள் ஆகிய மூன்று பேர் சேர்ந்து, மகேஷை சரமாரியாகத் தாக்கினர்.
இதில், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மகேஷ் மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேஷ் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், தோட்டத்தின் உரிமையாளர் உள்பட மூன்று பேரின்மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.