மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் ’டெல்லி சலோ’ போராட்டத்தை நடத்திவருகின்றனர். கடந்த பத்து நாள்களாக டெல்லி, புராரி பகுதியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
கடந்த நவ. 26ஆம் தேதியன்று போராட்டம் தொடங்கியபோது, விவசாயப் போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, விவசாயிகளை விரட்ட முயன்று அது முடியாமல்போகவே காவல் துறையினர் தடியடி நடத்தினர். எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல் துறை அனுமதி அளித்திருந்தது.
இதனிடையே, இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக விவசாயக் குழுக்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஐந்தாம் கட்டமாக நேற்று நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள், “நேற்று (டிச. 05) நடைபெற்ற ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை. இதனால், பிரதமருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் தெரிவித்தனர்” எனக் கூறினர்.
இதனையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...விவசாயிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு இடதுசாரிகள் ஆதரவு