டெல்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் (55), கடுமையான காய்ச்சலின் காரணமாக ஜூன் 16ஆம் தேதி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்கட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை. ஆனால், தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்ததால் மீண்டும் இரண்டாம் முறை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானது.
பின்னர், சிகிச்சையிலிருந்த அவருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில், சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சைக்கு பிறகு அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், உடல் வெப்பநிலையும் குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமைச்சர் ஜெயினின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினேன். டெல்லி சுகாதார அமைச்சரும் எனது நண்பருமான சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை சீராக இருப்பதை அறிந்து நிம்மதியடைந்தேன். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுமட்டுமின்றி ஆமி ஆத்மி எம்.எல்.ஏ அதிஷி, டெல்லி அரசாங்க ஆலோசகர் அபிநந்திதா மாத்தூர், ஆம் ஆத்மி ஊடக குழு உறுப்பினர் அக்ஷய் மராத்தே ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.