மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிவருகின்றனர்.
17ஆவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்திற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தப்போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் 93ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய ரயில்வே அமைச்சர், “விவசாயிகள் போராட்டத்தின் போக்கு திசை மாறுகிறது. கடந்த இரண்டு நாள்களாக விவசாயிகளுடன் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை, இடதுசாரி கொள்கை கொண்டோரை அதிகமாகப் பார்க்க முடிகிறது.
வேளாண் போராட்டத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம். போராட்டத்தின் நடுவே தங்களின் தலைவர்களை விடுவிக்கக் கோரிக்கை முன்வைக்கின்றனர். அதனால், மாவோயிஸ்ட் பிடியிலிருந்து விவசாயிகள் விலகினால், அவர்கள் நாட்டின் அமைதியைக் கருதி போராட்டத்தை நிறுத்துவார்கள்.
தேசத் துரோக குற்றத்திற்காகச் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க விவசாயிகள் போராட்டத்தில் கோரிக்கைவைக்கின்றனர். இதில் அறிவுஜீவுகளும் (நுண்புலம் நுழைவான்கள்), கவிஞர்களும் கலந்துகொள்வது வேடிக்கையானது. உங்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அதை அரசாங்கத்திடம் முன்வையுங்கள். அதை விடுத்து வேளாண் போராட்டத்தில் ஆதாயம் தேடாதீர்கள்” என்றார்.
மேலும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானலும் பேசத் தயார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...32 வயது விவசாயி மரணம்: முதற்கட்ட விசாரணையில் காவல்துறை