புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர், அமைச்சர்கள் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால் கடந்த 5ஆம் தேதி முதல் புதுச்சேரி நகரப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, மணக்குள விநாயகர் கோயில், பாரதி கடற்கரை சாலை, அரவிந்தர் ஆசிரமம், தலைமை செயலகம் ஆகியற்றை சுற்றி மூன்று அடுக்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை எதிரில் அமைந்துள்ள பாரதி பூங்கா தேதி குறிப்பிடாமல் மூடியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜன. 23) நடைபயிற்சி சென்ற சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, மூடிய பாரதி பூங்கா கதவை திறந்து உள்ள சென்று நடை பயிற்சி சென்றார். இத்தகவல் அறிந்து நடைபயிற்சியில் இருந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரத்க்ஷா கொடாரா, காவல் துறையினர் அங்கு வந்தனர். அப்போது காவல் துறையினருக்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
![புதுச்சேரியில் மூடப்பட்ட பாரதி பூங்காவை தடையை மீறி திறந்த அமைச்சர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-02-minister-kanthasamy-open-gate-tn10044_23012021092830_2301f_1611374310_1098.jpg)
அப்போது பேசிய அமைச்சர் கந்தசாமி, “பேரிடர் மேலாண்மை துறை தலைவரான முதலமைச்சர் நாராயணசாமி தடுப்புகளை அகற்ற உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பூங்காவில் மக்களை அனுமதிக்காவிட்டால் மீண்டும் ஆளுநர் மாளிகை முன் அமர்வேன். பாதுகாப்பு என்ற பெயரில் கிரண்பேடி ஒருவருக்காக துணை ராணுவத்தை நிறுத்தி, இதுவரை ஒரு கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் இது தேவையா? ஆளுநர் மாளிகை பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காக மக்கள் சுதந்திரமாக செல்ல தடை விதிப்பதா?” என்றார்.
இதையும் படிங்க...மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பார்க் சிஇஓ டிஸ்சார்ஜ்