புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், மருத்துவத் துறை செயலரும் புதுச்சேரி ஆட்சியருமாகிய அருண், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா ஆகியோர் இன்று காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையங்களை ஆய்வுசெய்தனர்.
அப்போது கரோனா சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கின்றதா என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள புல் திடல் திறந்தவெளியில் கரோனா தொற்று சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காரைக்காலில் கரோனா சிகிச்சை மையங்களில் இருக்கும் நோயாளிகள் அனைவரும் நல்ல பாதுகாப்பான முறையில் உள்ளனர். சிகிச்சை பெறும் நோயாளிகள் தங்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்" என்றார். புதுச்சேரியைவிட காரைக்கால் அரசு மருத்துவமனை சிறப்பாகச் செயல்படுகிறது என்றும் பாராட்டினார்.
மேலும், "இங்கு உள்ள செவிலியர், மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க ஆட்சியருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேவையான மருத்துவர்கள், செவிலியர், ஓட்டுநர்கள் ஆகியோரை தகுதி அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியமர்த்திக்கொள்ள ஆட்சியருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளைக் கொண்டுவர வாகனங்கள் வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் 10 புது வேன்கள் வாங்கப்படவுள்ளன. அதிலிருந்து இரண்டு வேன்கள் காரைக்காலுக்கு அளிக்கப்படும்'' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலா குறித்த கேள்வி: எடப்பாடி சொன்னது இதுதான்...!