குறிப்பிட்ட காலத்தில் அல்லது பருவத்தில் பறவைகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தேவைக்காக கூட்டமாக வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வது வழக்கம். அவ்வாறு இடம்பெயரும் பறவைகளுக்கு ’இடம்பெயர் பறவைகள்’ என்று பெயர்.
அதன்படி, இந்தியாவிலுள்ள மிகப்பெரிய உள்நாட்டு ஏரியான சாம்பார் உப்பு ஏரிக்கும் சில பறவைகள் இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ளன. தற்போது, அவ்வாறு இடம்பெயர்ந்த பறவைகளில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
மர்ம காய்ச்சல் காரணமாக பறவைகள் இறந்தனவா அல்லது ஏரியிலுள்ள நீரில் நச்சுகள் கலந்ததால் பறவைகள் இறந்தனவா போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சுஹ்ராம் பிஸ்னோய் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“பறவைகள் இறப்பு போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறமாலிருக்க, வன உயிரின சோதனைச் சாவடி விரைவில் அமைக்கப்படும். எங்களது நகராட்சி ஊழியர்கள் இறந்த பறவைகளின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். மயங்கிய நிலையிலுள்ள பறவைகளையும் பத்திரமாக மீட்டு, மீட்பு மையங்களுக்கு அனுப்பியுள்ளனர். இதன்மூலம் நிலைமை தற்போது சீராகியுள்ளது.
இறந்த பறவைகளின் உடல்களை ஆராய்வதற்காக போபாலுக்கு அனுப்பியிருந்தோம். அங்கு பரிசோதித்ததில், பறவைக் காய்ச்சலால் எந்தப் பறவைகளும் இறக்கவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. மேலும், பரேலியைச் சேர்ந்த மருத்துவக் குழு நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு, இறந்த பறவைகளின் உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களின் அறிக்கையை நாங்கள் விரைவில் பெற்று பறவைகளின் இறந்ததற்கான காரணத்தை வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வானிலை காரணமாக மேலும் மோசமடையும் டெல்லி காற்று மாசு!