தமிழ்நாட்டில் அழிந்துவரும் பொம்மலாட்டக் கலையை உயிர்ப்பிக்க ராட்சத உயரம் கொண்ட பொம்மைகளை உருவாக்கி கலையை நிகழ்த்த புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் நாடகக் குழு தயாராகிக் கொண்டிருக்கிறது.
பொம்மலாட்ட நிகழ்ச்சிக்காக மரக்கட்டைகள் - காகிதம் - இரும்பு கம்பிகள் கொண்டு ராட்சத பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமான 90 சென்டி மீட்டரிலிருக்கும் பொம்மலாட்ட பொம்மைகளைப் போல அல்லாமல், 12 அடி உயரம் கொண்ட ராட்சத பொம்மைகளாக இவை வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தயாரிக்கும் பணியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 பேர் கொண்ட "லே கிரேண்ட் பர்சன்ஸ்" என்ற கலைக்குழுவினரும், புதுச்சேரி மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பொம்மைகளைக் கயிறுகளைக் கொண்டு பிணைத்து, குச்சியில் கட்டி அசைத்தோ அல்லது வளையத்தில் இணைத்தோ ஒட்டுமொத்த பொம்மலாட்டத்தையும் ஒரே கலைஞர் இயக்கும் பழைய பாணி பொம்மலாட்டத்தைப் போல் இல்லாமல் ஒரு பொம்மையை ஒருவர் மட்டுமே இயக்க முடியும் என்பதே இந்த ராட்சத பொம்மலாட்டத்தின் தனிச் சிறப்பு. 25 கிலோ எடை கொண்ட அசுர உருவத்தையும் பெற்றிருக்கும் இந்த நவீன பொம்மலாட்ட நிகழ்த்த ஒத்திகை பார்க்க பல்வேறு கல்லூரிகளில் பயிலும் நாடகத் துறை மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ராட்சத பொம்மலாட்டம் குறித்து பேசும் நாடகக் கலை மாணவர் இளம்பருதி, “மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட பொம்மலாட்டத்தை மக்களோடு மக்களாகக் கலந்து, உரையாடி, விளையாடி, அவர்களின் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். அரங்க நிகழ்வுகளைப் போல இந்த ராட்சத பொம்மலாட்டத்தை சிறிய இடங்களில் வைத்து கூத்து நடத்த முடியாது; திறந்த வெளியில்தான் நடத்த முடியும். ராட்சத பொம்மலாட்ட முதல் நிகழ்ச்சி புதுச்சேரியின் கடற்கரை சாலையில்தான் நிகழவிருக்கிறது. ராட்சத பொம்மலாட்ட நிகழ்ச்சி புதுச்சேரியின் பல இடங்களில் குழந்தைகள், பெரியோர் என வயது வித்தியாசமின்றி மகிழ்விக்கும் என்பதில் ஐயமே வேண்டாம்” என்கிறார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாடகக் குழு இயக்குநர் ஸ்டிவக் கூறுகையில், ”பெரிய பொம்மைகள் வழியாகச் சமூகத்திற்கு நல்ல விஷயங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதை இந்த நாடகக் குழுவின் முக்கிய நோக்கம்” என கலையின் நோக்கமே சமூகத்தை நெறிப்படுத்துவது எனச் சொல்லாமல் சொல்கிறார்.
பொம்மைகளை உருவாக்கி வரும் பல்கலைக்கழக முனைவர் பிரேம்நாத் இதுகுறித்து கூறும்போது, “பிரம்பு கைத்தடி பொம்மலாட்டம் - நிழல் பொம்மலாட்டம் - பொய்முக பொம்மலாட்டம் - கையுறை பொம்மலாட்டம் என கி.பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து பல மாறுதல்களைக் கண்ட, நமது மரபுக்கலையான பொம்மலாட்டம் இந்த ராட்சத பொம்மலாட்டம் மூலமாக மற்றொரு பரிமாணத்தை அடையப்போவது உறுதி. எல்லா வகையிலும் புதுமையைக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கும் ராட்சத பொம்மலாட்டம் புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதுச்சேரி கலைஞர்களுடன் பிரெஞ்சு கலைஞர்கள் இந்தப் பொம்மலாட்டத்தை நிகழ்த்த உள்ளனர், பார்த்து மலைக்க நாமும் தயாராக இருங்கள்” என்கிறார்.
குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சனா பேய், மோட்டு பட்டுலு உள்ளிட்ட கதாபத்திர பொம்மைகளையும் மேற்கத்திய கதாபாத்திரங்களையும் இணைத்து ராட்சத பொம்மலாட்ட நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க : மணற்சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு