அத்தியாவசியப்பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ((Essential Commodities (Amendment) Act 2020)); விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக ( மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் ((Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)); விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) (( The Farmers (Empowerment and Protection) agreement on Price Assurance)) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் செப்.27 ஆம் தேதி மாலை இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் இந்த 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாக குற்றம்சாட்டி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர் நீட்சியாக, 'டெல்லிக்குச் செல்' என்னும் பொருளில் அமைந்த 'டெல்லி சலோ' போராட்டத்தை விவசாயக் குழுக்கள் அறிவித்தன.
இதனைத் தொடர்ந்து டெல்லியை நோக்கி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் புறப்பட்டனர். அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா அரசும் டெல்லி அரசும் பல்வேறு தடுப்புகளை அமைத்தனர். கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசியெறிந்தனர். அந்த தடையெல்லாம் மீறி, விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டனர். இதனால் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, டெல்லியின் புறநகர்ப்பகுதியான புராரியில் அமைந்துள்ள நிரங்கரி மைதானத்தில் அமைதியாக விவசாயிகள் போராடிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தின் ஆறாவது நாளான நேற்று(டிச.01) பிற்பகல் 3 மணிக்கு வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்குடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பஞ்சாபில் உள்ள 32 சங்கங்களின் பிரதிநிதிகள், ஹரியானாவில் உள்ள விவசாய சங்கம், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு கமிட்டி, ராஷ்டிரிய கிஷான் மஸ்தூர் சங்கதன் என மொத்தம் 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களில் இருக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் தீர்வு அமைக்கவும் புதிதாக 5 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம் என்றும்; அதில் இடம்பெறும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை முன்மொழியுமாறும் மத்திய அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த காலங்களில் இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் உரிய தீர்வு எட்டப்படாததைக் காரணம் காட்டி, விவசாயிகள் இந்தக் குழுவை அமைக்கவேண்டாம் என மறுப்புத்தெரிவித்தனர்.
நேற்று(டிச.01) பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையானது, மாலை 6:45 மணி வரை நடந்தது. அப்போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், அங்கு வழங்கப்பட்ட தேநீரைகூட அருந்தாமல் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வெளியேறினர்.
இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நாளை (டிச.03) நடத்த முடிவுசெய்யப்பட்டது.
இதுகுறித்த பேச்சுவார்த்தைக்குப்பின் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ' அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. விவசாயிகள் தொடர்பான எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது. இதுதொடர்பாக 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும். இது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் பிரச்னைகளை எழுத்துப்பூர்வமாக தரச்சொல்லியிருக்கிறோம்' என்றார்.
இதுதொடர்பாக பாரதிய கிஷன் யூனியன் என்னும் விவசாய அமைப்பின் தலைவர் நரேஷ் டிக்கேட் கூறியதாவது, 'எங்களது கோரிக்கைகள் தொடர்பான அறிக்கையை நாங்கள் டிச.02 அன்று ( அதாவது இன்று) மத்திய அரசிடம் தரயிருக்கிறோம். மத்திய அரசு பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையை நடத்த தொடங்கியுள்ளது. இதுகுறித்தான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை (டிச.03) நடக்கயிருக்கிறது’ என்றார்.
இந்நிலையில் டெல்லியைச் சுற்றியுள்ள மூன்று முக்கிய எல்லைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, அப்பகுதியில் யாரும் உள்ளே நுழையாதவாறு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.