மாமியாருடன் மருமகள் வசிக்கும் வழக்கம் காலத்தின் மாற்றத்தால் குறைந்துகொண்டே போகின்றன. இந்த சமூக நிலை மாற்றம் வேதனைக்குரியதுதான். பெற்றெடுத்த மகன் தன்னுடன் இல்லாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை எந்தவொரு தாய்மாரும் ஏற்கமாட்டார்கள். இந்த உலகம் அன்பால் இயங்கக்கூடியது.
திரை மாயை பெண்கள் மீதான மனக்கசப்பை உவந்து தள்ளுகிறது. மாமியார்-மருமகள் சண்டை, கொடுமையை வைத்து ஆயிரம் எபிசோட் எடுத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர் சினிமாக்காரர்கள். ஒரு வீட்டில் மாமனார், மருமகன் சண்டையை கூட தீர்த்து வைத்து விடலாம். ஆனால், மாமியார் மருமகள் சண்டை போட்டால் அந்தத் தெருவே களேபரம் ஆனது போல் காட்சியளிக்கும்.
மாமியார், மருமகள் அந்நியோன்யமாக இருப்பதை பார்ப்பது அரிது. அதையும் மீறி பார்ப்பவர்கள் பொறாமை கொள்வார்கள்.
அந்த வகையில், மாமியார் மருமகளை ஒன்று சேர்க்கும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த நிருபன் என்பவர் புதிதாக உணவகம் திறந்து வித்தியாசமான சலுகைகளை அறிவித்துள்ளார். அவர் அளித்துள்ள சலுகையை கேட்டால் நீங்களே அசந்து போவீங்க.
அப்படி என்ன ஸ்பெஷல் கேட்கலாம்
புதுச்சேரி கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்த நிருபன் ஞானபானு என்பவர், நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தில், 100 திருக்குறளை ஒப்புவித்தால், அவர்களுக்கு பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மாமியார்-மருமகளுக்கு இலவச சாப்பாடு
மேலும், மாமியார், மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 விழுக்காடு கட்டணம் இலவசம். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்து இதுவரை 6 பேர் 100 திருக்குறளை ஒப்புவித்து பிரியாணி சாப்பிட்டு சென்றுள்ளனர். ஆனால், இதுவரை ஒரே ஒரு மாமியார், மருமகள் மட்டுமே ஊட்டிவிட முன்வந்தனர்.
சாப்பாட்டில் தொடங்கும் சண்டை
சாப்பாட்டில்தான் குடும்ப சண்டையே ஆரம்பிக்கிறது. மாமியார், மருமகள் பிரச்னையின் தொடக்கமே இங்கே தான், உணவில் ஆரம்பிக்கும் பிரச்னை, அன்பாய் முடியும் என்று எதிர்பார்க்கும் நிருபனின் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.
இதுகுறித்து நிருபன் கூறுகையில், "தந்தையின் தமிழ் ஆர்வத்தால் தூண்டப்பட்டு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். குடும்ப ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக மாமியார், மருமகள் திட்டம் அறிவிக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.
வீட்டில் மல்லுக்கட்டு போட்டி நடத்தும் மாமியார் மருமகள், ஜல்லிக்கட்டு உணவகத்திற்கு அன்பு காட்ட வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. நிருபனின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகளை பகிர்வோம்.
இதையும் படிங்க: 'அன்புதான் அனைத்துக்குமான பதில்... அன்பே வழி...' - சாதனைப் பெண் சஞ்சனா கோயல்