டெல்லி: பிகாரில் அடுத்துவரும் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் மாயாவதியின் மகா ஜனநாயக மதசார்பற்ற கூட்டணி முக்கிய பங்காற்ற உள்ளது. இது குறித்து பகுஜன் சமாஜ் எம்.பி, மலூக் நாகர் கூறுகையில், “பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் சம்தா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி.), அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகா ஜனநாயக மதசார்பற்ற கூட்டணி அமைத்துள்ளது.
இந்தக் கூட்டணி மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். பிகாரில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு நல்ல அடித்தளம் உள்ளது. இந்தத் தேர்தலை ஆர்.எல்.எஸ்.பி தலைவர் உபேந்திர குஷ்வாஹா தலைமையில் சந்திப்போம்” என்றார்.
பிகாரின் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடக்கிறது. நவம்பர் 10 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.