புதுச்சேரி காவல் நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அலுவால் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளையும் காவலர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புதுவருடக் கொண்டாட்டங்களையொட்டி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக இரு தினங்களுக்கு முன்பு மின்துறை, பொதுப்பணித்துறை, சுற்றுலாத் துறை, தீயணைப்புத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் புதுக்குப்பம் கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள புதுவருடக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நகரில் பழுதாகியுள்ள மின் விளக்குகளை சரி செய்யவும், தேவைப்படும் பகுதிக்கு கூடுதல் மின் விளக்குகள் அமைக்கவும் மின் துறையிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
கடற்கரை சாலையில் புதுவருடக் கொண்டாட்டத்தின்போது கழுகுப்பார்வை கேமரா உள்ளிட்ட பல கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதுவருடக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் முறையான அனுமதி பெற்றுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒன்பது அரசுப்பணி; தந்தையை பெருமைபடுத்திய விவசாயி மகன்!