மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, '' அரசியல் காழ்ப்புணர்ச்சி குறித்து பேசுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தகுதியில்லாதவர்கள். ஏனென்றால், அக்கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்த 120 பேர் அரசியல் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர்'' என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தங்களது கட்சியினரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறினர். இதைத் தொடர்ந்து பேசிய அமித் ஷா, '' உண்மைகள் கசக்கத் தான் செய்யும். மீண்டும் கூறுகிறேன், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கேரளாவில் 120 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியினரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், அங்கு பாஜக ஆட்சி செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில், எங்களது கட்சியினர் கொல்லப்பட்டால் யாரும் அதனைப் பொருட்டாக கூட மதிப்பதில்லை'' என்றார்.
முன்னதாக, சிறப்பு பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா மாநிலங்களைவில் இன்று நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்தாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் 'ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல்!