ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்தில் ஒப்பந்ததாரரை கிட்டத்தட்ட 15 முதல் 20 மாவோயிஸ்ட்கள் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் சுகுமார் மண்டல் என அடையாளம் காணப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மதிலி காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு)ஆர்.என்.மாஜி கூறுகையில், “டங்ரிகுடா அருகே கட்டுமானம் நடைபெற்றுவரும் பகுதியைத் தாக்கி, மூன்று வாகனங்களுக்கு தீ வைத்தனர். அதனைத் தடுக்க முயன்ற கட்டுமான ஒப்பந்ததாரரை சுகுமார் மண்டலை மாவோயிஸ்ட்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
சாலைகள் அமைப்பதற்கு மாவோயிஸ்ட்கள் எதிர்ப்பு
கடந்த சில மாதங்களாக, இப்பகுதியில் சாலைகள் அமைப்பதை மாவோயிஸ்ட்கள் எதிர்த்தனர். சாலைகள் அமைந்தால் இப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் வாகனங்கள் வருவதற்கு வழிவகுக்கும் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். ஒப்பந்ததாரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, கையால் எழுதப்பட்ட சுவரொட்டியை அந்த இடத்தில் விட்டுவிட்டுச் சென்றனர் என, ஆய்வாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்குப் பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், எல்லை பாதுகாப்புப் படையினர்(பிஎஸ்எஃப்) மாவோயிஸ்ட் கும்பலை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
முன்னதாக, இம்மாவட்டத்தில் காளிமேலா காவல் நிலையத்தின் கீழுள்ள குருப் கிராமத்திற்கு அருகே நாட்டு துப்பாக்கி உற்பத்தி மையத்தை அழித்ததோடு, தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள், உபகரணங்களை எல்லை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.