ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் சித்ரகொண்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்ளூர் காவல் துறை உதவியுடன் ஆந்திர காவல் துறை, எல்லைப் பாதுகாப்புப் படை அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையறிந்த மாவோயிஸ்ட்டுகள் முகாம்களிலிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களது முகாமிற்குள் நுழைந்த அதிரடிப் படையினர், அங்கிருந்த கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், டிபன் பாக்ஸ் குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றியதோடு, மாவோயிஸ்ட்டுகளின் முகாமை முற்றிலுமாக அழித்தனர்.
ஆதாரங்களின்படி, மாவோயிஸ்ட்டுகள் பல நாள்கள் முகாமில் தங்கியிருந்ததாகவும், தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்ததாகவும் காவல் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர். முகாமிலிருந்து இரண்டு பல்வேறு வகை துப்பாக்கிகள், பத்திரிகைகள், பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.