மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சந்திரிகோனா பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணிமா மவுர். இவர் கல்லீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அருகில் உள்ள மருந்தகங்களில் போதிய மருந்துப் பொருள்கள் கையிருப்பு இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்.
இதையறிந்த மருந்தியல் மாணவரும், பூர்ணிமா மவுரின் உறவினருமான சௌமித்ரா மவுர் என்பவர் மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவரும் ஒரு வானொலிக்கு இது குறித்த தகவலை அளித்துள்ளார்.
வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட தகவலையடுத்து பூர்ணிமா மவுரை மருத்துவர் ஒருவர் தொடர்புகொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்து போதிய மருந்துப் பொருள்களை பரிந்துரை செய்தார்.
இந்த மருந்துப் பொருள்கள் குறித்த விவரங்களை சேமித்த வானொலி குழும செயலர் அம்பரிஷ் நாக் பிஸ்வாஸ், வடக்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள சோனார்பூர் கல்லீரல் நிறுவனத்திடம் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) மருந்துப் பொருள்களை ஆர்டர் செய்துள்ளார்.
இதனையடுத்து, அந்நிறுவனம் நேற்று (செவ்வாய் கிழமை) வானொலி குழுமத்தின் அலுவலகத்தற்கு மருந்துப் பொருள்களை அனுப்பிவைத்துள்ளது.
பின்னர், வானொலி குழுமத்தைச் சேர்ந்த சுபர்னா சென் என்ற நபர் 150 கி.மீ பயணித்து பூர்ணிமா மவுரிடம் மருந்துப் பொருள்களை ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்விற்கு பல தரப்பு மக்களிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியா...!