பிகாரில் வசிக்கும் முகேஷ் லோஹரால் என்பவர், ஆறு ஆண்டு காலமாக நடைபெற்றுவந்த வழக்கில் சரணடைய 1400 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிடைத்த தகவலின்படி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ம.பி.யில் உள்ள உஜ்ஜைன் பகுதியில் முகேஷ் வசித்து வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த அவரது உறவினருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், முகேஷ் அங்கிருந்து புறப்பட்டு பிகார் மாநிலத்தில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்ற தகவல் காவல் துறை சார்பில் முகேஷூக்கு கிடைத்துள்ளது. சட்டத்தின் மீதான மரியாதை காரணமாக, உடனடியாக உஜ்ஜைனுக்கு புறப்பட முயன்றார். ஆனால், கரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த அவர், கூலி வேலை செய்து சிறிய அளவிலான பணத்துடன் சைக்கிளிலே காவல் நிலையம் செல்ல முடிவு செய்தார். சுமார் 1400 கிமீ தூரத்தை 10 நாள்கள் சைக்கிள் மிதித்து வெற்றிகரமாக காவல் நிலையத்தை அடைந்தார். பல இடங்களில் சாப்பாடுக்குகூட காசு இல்லாமல், கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு சைக்கிள் மிதித்து வந்துள்ளார்.
இவரின் நேர்மையை பார்த்து வியந்த காவலர்கள், காவல் நிலையத்திற்கு வந்த முகேஷூக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர், முகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருப்பினும், இவரின் செயல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.