உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தின் கோனார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராகுல் யாதவ் மற்றும் ராபின் யாதவ். உறவினர்களான இவர்களின் தந்தைகள் உயிரிழந்த பின், இவர்களுக்கு சொந்தமான நிலங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அப்போது தங்களது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்னதாக பிரச்னை ஏற்பட்டபோது, ராபின் யாதவை ராகுல் யாதவ் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ராபின் யாதவ் தனது வீட்டிலிருந்து குடிபெயர்ந்து சில நாள்களுக்கு உறவினரின் வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் சொந்த கிராமத்திற்குச் சென்ற ராபின் யாதவ், தனது தாய் மற்றும் சகோதரியுடன் விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு நீர் பகிர்தல் தொடர்பாக ராகுல் - ராபின் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ராபின் யாதவை ராகுல் யாதவ் கோடாரியால் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக குடும்பத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், ராபின் யாதவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராகுல் யாதவ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கொலை செய்த ராகுல் யாதவ், தனது தாய் மற்றும் சகோதரியுடன் கிராமத்திலிருந்து தப்பியுள்ளனர். விவசாய நிலத்திற்கான நீர் பகிர்தல் தொடர்பான பிரச்னையில் உறவினரையே கொலை செய்த சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தெருமக்களை பழிவாங்க தேநீர் கடைக்கு தீவைத்த இளைஞர்கள்!